பிறக்கும் போதே அடையாள அட்டை இலக்கம் வழங்க தீர்மானம்!

தேசிய அடையாள அட்டை இலக்கம் தொடர்பில் விரைவில் இலங்கையில் புதிய நடைமுறையொன்றை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மாத்தளை நகரசபையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தாக்குதல்களின் பின் இடம்பெற்றிருந்த சுற்றிவளைப்புகளின் போது ஒரு தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பத்திற்கும் அதிகமான பெயர்களில் அடைாயள அட்டைகள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

இவை மிகவும் பாரதூரமானதும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுமான விடயமாகும். இவ்வாறு பலருக்கு அதிகமான தேசிய அடையாள அட்டைகள் உள்ளன.

இந்த விடயத்திலுள்ள ஆபத்தை கருத்தில் கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் புதிய நடைமுறையொன்றை இலங்கையில் கொண்டு வர தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான தேசிய அடையாள அட்டை இலக்கத்தை வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த இலக்கமானது பிறப்புச் சான்றிதழுடன் இணைக்கப்படும். இதற்கான வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net