திருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு

திருமலை மாவட்ட ஆக்கிரமிப்பு: நன்கு திட்டமிடப்பட்ட வரலாற்று நகர்வு

எவர் இலங்கையின் திருகோணமலையை ஆழ்கின்றாரோ அவர் இந்துமா சமுத்திரத்தை கட்டி ஆழ்கின்றார் எனும் பிரித்தானியரின் கூற்றினை அமெரிக்கா, இந்தியா, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட சக்திகள் இன்றும் உறுதிப்படுத்திக் கொண்டிருப்பது எமது மாவட்டத்தின் கேந்திர முக்கியத்துவத்தினை எடுத்துக் காண்பிக்கின்றது.

பல இனங்கள் வாழும் இந்நாட்டினை முழு சிங்கள பௌத்த ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் நோக்கில் சுதந்திரத்தின் பின் மாறி மாறி வந்துகொண்டிருக்கும் எல்லா அரசுகளும் கூட ஒரே கருத்தில் தொடராக செயற்பட்டுக் கொண்டிருப்பதனை நாம் அவதானிக்கலாம்.

சிறுபான்பான்மை இனங்கள் செறிந்து வாழ்கின்ற வடக்கு, கிழக்கு போன்ற ஓரிரு மாகாணங்கள், மாவட்டங்களையும் கூட பௌத்த மக்களை குடியேற்றி தமது பெரும்பான்மை ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரும் திட்டம் பெரும் சப்தமில்லாமலும் சிலபோது நம்மவர்களின் துணையுடனும் மிக அழகாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இப்பின்னணியில் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியத்துவமும் கருத்திற்கொள்ளப்பட்டு நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சிங்களமயப்படுத்தல் நகர்த்திச்செல்லப்படுவதை நாம் அவதானிக்கலாம்.

1955ஆம் ஆண்டுகளில் மாவட்ட சனத்தொகையில் 6%இலும் குறைவாக இருந்த சிங்கள சமூகம் இன்று 26%வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

1976ஆம் ஆண்டு தொகுதி நிர்ணயத்தின் போது புதிதாக உருவாக்கப்பட்ட சேருவிலை தொகுதி (சிங்கள மக்களைக் கொண்டது) மூதூர் தொகுதியின் காணிகளையும் பிரித்தெடுத்து 1600இற்கு மேற்பட்ட சதுர கிலா மீட்டர் பரப்பளவிலும், ஆரம்பத்திலிருந்து காணப்பட்டு வரும் மாவட்டத்தின் அதிக சனத்தொகையை உள்ளடக்கிய மூதூர் தொகுதி வெறும் 600 சதுர கிலோ மீற்றர் பரப்பிற்கும் சுருக்கப்பட்டது.

திருமலை மாவட்ட அபிவிருத்தி விஷேட செயற்திட்டமொன்று 2030இல் முழுமைபெறவுள்ளது. கல்வி, சுகாதாரம், நகராக்கம், புண்ணிய பூமி ஸ்தல பிரகடனம், கடற்றொழில், நிர்வாக கேந்திர முக்கித்துவம் வாய்ந்த இடங்கள் போன்ற பல முக்கிய விடயங்களை உள்ளடக்கியுள்ள இத்திட்டத்திலும் முஸ்லிம் பிரதேசங்கள் உள்வாங்கப்படாது பல விடயங்கள் முடிக்கப்பட்ட நிலையில் சென்று கொண்டிருக்கின்றது.

மிகப்பெரும்பாலும் மாவட்டத்தில் சிறுபான்மையாகவுள்ள சிங்கள சமூகத்தை மையப்படுத்திய இடங்களிலேயே இவ்அபிவிருத்தி சென்று கொண்டிருக்கின்றது.

மாவட்ட செயலகம் கச்சேரி – 4ஆம் கட்டையில், பலமான பல நியாயப்பாடுகளைக் கொண்ட கிண்ணியா வைத்தியசாலையை விட்டுவிட்டு கந்தளாய் வைத்தியசாலை மத்திய அரசு உள்வாங்கி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை, வர்த்தக வலயம் கப்பல்துறையை அண்டி உருவாக்கப்பட்டுள்ளமை போன்ற பல உதாரணங்களைக் கூறலாம்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய வட்டார எல்லை நிர்ணய வரத்தமானி அறிவித்தலிலும் கூட 26% சிங்கள சமூகத்திற்கு 66 பிரதிநிதிகள் கிடைக்கத்தக்கதாகவும் மாவட்டத்தில் 43% பெரும்பான்மையாகவுள்ள முஸ்லிம் சமூகத்திற்கு 55இலும் குறைவான உறுப்பினர்களே தெரிவாகும் விதத்தில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட, ஆரம்பிக்கப்பட்ட அந்தந்தக் காலப்பகுதிகளிளும் எமது மாவட்டத்தில் முஸ்லிம் அரசியல் சமூகத்தலைமைகள் காணப்பட்டு வந்துள்ளன.

ஆயினும் அவர்களது முன்னெடுப்புக்கள் இப்பெரும் சவால்களை முறியடிப்பதற்குத் தேவையான பலத்தினை கொண்டிருக்கவில்லை அல்லது இதன் அபாயத்தை சரியாக உணர்ந்து ஒருமித்துப் போராடவில்லை. அவர்களது தனிப்பட்ட, சிறு சிறு கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படாமலே அத்தனையும் அரங்கேற்ப்பட்டு வருகின்றன.

இன்று தோப்பூரின் செல்வ நகர் காணி ஆக்கிரமிப்பு, புல்மோட்டை, கரிமலை ஊற்று, கிண்ணியாவின் எல்லைப்புற காணிகள் ஆக்கிரமிப்புக்கள் யாவும் இப்பெரும் திட்டத்தின் சில துளிகளேயாகும்.

நாட்டின் 25 மாவட்டங்களுள் திருகோணமலை(43%), அம்பாறை(46%) ஆகிய இரு மாவட்டங்கள் மாத்திரமே முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டவை. நிலைமை இவ்வாறு நீடிக்குமானால் இன்னும் ஓரிரு தசாப்தங்களில் எமது மாவட்டமும் சிங்களப்பெரும்பான்மை மாவட்டமாக மாற்றப்பட்டு விடும் என்பதில் ஐயமில்லை.

ஒரு சமூகத்தின் இருப்பு, அதன் உரிமைசார் அடிப்படையான விடயங்கள் வெளிப்படையாக நன்கு திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

இத்தருணத்திலாவது தலைமைகள் பேதங்கள் மறந்து ஒன்றுபட்டு சவால்களை முறியடிக்க முன்வரல் வேண்டும், இவ்அபாயங்களை மறந்து சில வீதிகளையும், கட்டிடங்களையும் அமைத்து தலைமைகளும் மக்களும் திருப்திப்பட்டு பேசிக்கொள்வதும் அப்பாணியில் செயற்படுவதும் சமூக முதிர்ச்சியின்மையையே எடுத்துக்காட்டும்.

ஆக மாவட்ட அரசியல், சமூகத் தலைமைகளும் மக்களும் பின்வரும் விடயங்களைக் கருத்திற்கொண்டு செயற்படுவதன் மூலம் எமது சந்ததிகள் எதிர்நோக்கவுள்ள

பேரபாயங்களை மாத்திரமன்றி தற்பொழுது நாம் சந்தித்துக்கொண்டிருக்கின்ற நெருக்கடிகள், சவால்களை ஓரளவுக்கேனும் குறைக்கலாம்.

சகல தரப்பும் முதலில் பிரச்சினையின் பாரதூரத்தினை சரியாக அறிந்து விழிப்படைதல் வேண்டும்.

மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற பிரதான பிரச்சினைகள் முன்னுரிமைப்படுத்தப்பட்டு அனைத்து தலைமைகளும் அப்பிரச்சினைகளில்

அவற்றுக்குரிய பெறுமானத்தோடு கவனம் செலுத்துதல்.

மாவட்ட அரசியல், சிவில் தலைமைகள் உடன் உட்கார்ந்து மாவட்டத்திற்கான நீண்டகாலத்திட்டமொன்றை வரைந்து அப்பாதையில் செல்தல்.

அரசியல் தலைவர்கள் தமது கட்சித்தலைமைகளோடு உரிமைசார் அடிப்படையான விடயங்களை மிகத்தெளிவாக விளக்கி தேவையாயின் பேரம்பேசி தமது அரசியல் பயணத்தை மேற்கொள்தல். சாத்தியப்படாதபோது மாவட்ட முஸ்லிம்கள் ஒன்றுபட்ட தனித்துவமான மாற்று அரசியல் பயணத்தைக்கூட யோசிக்கலாம்.

சிவில் சமூகத்தலைமைகள் ஒன்றுபட்டு இவ் அபாயத்திலிருந்து எமது மாவட்ட முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்க முன்வரவேண்டும். மாவட்டம் தலுவிய அரசியல் நோக்கமற்ற பரந்த ஷூராக் கட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டு இதனை சாதிக்க முனையலாம்.

மக்கள் தமது சுய இலாபங்களுக்கு அப்பால் நமது சந்ததிகளின் நன்மை கருதி செயற்பட உறுதிபூணல் வேண்டும். தமது வாக்குரிமையை அதனடிப்படையில் பயன்படுத்துதல் வேண்டும்.

மாகாண மாவட்ட உயர்பதவிகளில் அமர்த்தப்படும் அதிகாரிகள் விடயத்திலும் நாம் கூடுதல் கரிசனை காட்டுதல் வேண்டும், அவ்விடங்களுக்குத் தகுதியானவர்களை உருவாக்கும் பர்ளு கிபாயா வேலைத்திட்டமும் அவசியமானதாகும்.

மாவட்டத்தில் சகோதர சமூகங்களும் கனிசமான அளவில் (தமிழ் மக்கள்- 31%, சிங்கள மக்கள்-26%) வாழ்கின்றனர் என்பதை நாம் புரிந்து சகவாழ்வுடன் நீதி தர்மங்களை மதித்து அவர்களுடனான உறவைப் பலப்படுத்தி எமது முன்மாதிரிகளால் அவர்களது மனங்களை வெல்தல் வேண்டும்.

இவ்விடயங்கள்பற்றி சிந்தித்து மாவட்ட முஸ்லிம் தலைமைகள் ஒன்றுபட்டு செயல்படுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

-எழுத்தாளர் Mubarak-

Copyright © 0687 Mukadu · All rights reserved · designed by Speed IT net