அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி!

அம்பாறை மாவட்டத்தில் தாண்டவமாடும் வறட்சி!

அம்பாறை மாவட்டத்தில் வறட்சியான காலநிலை நீடித்து வருவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளதோடு குடிநீரை பெற்றுக்கொள்வதிலும் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பெரும்பாலான வயல் நிலங்கள் தண்ணீரின்றி வாடிவருகிறது. வாய்க்கால்கள் நீரின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.

குளம் குட்டைகள் வற்றியுள்ளன. கால்நடைகள் தீவனங்களுக்காக அங்குமிங்கும் அலைகின்றன. நெல் பயிர்கள் ஒரு மாத ஒன்றரை மாத பயிராகவுள்ளன.

இந்த நிலையில் வறட்சி ஏற்பட்டிருப்பது நல்லதல்ல. நிச்சயம் இலங்கையில் மொத்த நெல் உற்பத்தியில் கணிசமான பாதிப்பை இந்த வறட்சி ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.

நாவிதன்வெளிப் பிரதேசத்தில் வீரச்சோலைப் பிரதேசம் தண்ணீரின்றி தனித்து விடப்பட்டுள்ளது. நாவிதன்வெளிப் பகுதியிலுள்ள வாய்க்கால்கள் தண்ணீரின்றி வரண்டுள்ளன.

பார்க்குமிடமெல்லாம் பச்சைப்பசேலென்று காணப்படும் பிரதேசங்கள் மஞ்சள் நிறமாகி வரண்டு காணப்படுகின்றன.

பகலில் தாங்க முடியாத வெப்பம் நிலவுகின்றது. குழந்தைகள் முதல் வயோதிபர் வரை காய்ச்சல், தடிமன் என பலவகை நோய்கள் பீடிக்க ஆரம்பித்துள்ளன. வீதிகளில் தாகம் தீர்க்கும் பழவகைகளின் அங்காடிக் கடைகள் தினம்தினம் அதிகரித்து வருகின்றன.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 11381 குடும்பங்களைச் சேர்ந்த 39421பேர் இதுவரை வறட்சியால் பாதிப்புற்றுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.

நெல் உற்பத்தியில் பிரதான பங்களிப்பை செலுத்தி வரும் அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேசத்தில் 2649 குடும்பங்களைச் சேர்ந்த 8329பேரும், திருக்கோவில் பிரதேசத்தில் 306 குடும்பங்களைச் சேர்ந்த 1110 நபர்களும், பொத்துவில் பிரதேசத்தில் 195 குடும்பங்களைச் சேர்ந்த 3738 பேரும், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் 1078 குடும்பங்களைச்சேர்ந்த 3577 பேரும், அக்கரைப்பற்று பிரதேசத்தில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 204 பேரும், மஹாஓயா பிரதேசத்தில் 1574 குடும்பங்களை சேர்ந்த 5994 பேரும், அம்பாறை பிரதேசத்தில் 96 குடும்பங்களைச்சேர்ந்த 356 பேரும், பதியத்தலாவ பிரதேசத்தில் 3168 குடும்பங்களை சேர்ந்த 11282 பேரும், தமன பிரதேசத்தை சேர்ந்த 531 குடும்பங்களில் 2124 நபர்களும், உஹன பிரதேச செயலாளர் பிரிவில் 32 குடும்பங்களைச்சேர்ந்த 145 நபர்களும், தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் 690 குடும்பங்களைச் சேர்ந்த 2570 பேரும் அம்பாறை மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடி நீரை பிரதேச செயலகங்களும் பிரதேச சபைகளும் இணைந்து நீர்தாங்கிகள் மூலம் பெற்றுக்கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

இருந்த போதும் மேலதிக தேவைகளுக்கான நீரை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். அம்பாறை மேற்குப்பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

வீதியெங்கும் தண்ணீர் கொள்ளும் பெரிய வூளிகள் பாத்திரங்கள் காணப்படுகின்றன. அதேபோன்று நாவிதன்வெளி திருக்கோவில் பிரதேசங்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் தொடரும் வறட்சியால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்பட ஆரம்பித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்தால் மிகவும் ஆபத்தான நிலையை எதிர்நோக்கவேண்டி வரலாம். குடிநீர்ப் பிரச்சினை ஒருபுறம் தமது பிரதான தொழிலான விவசாயத்தை கைவிடும் நிலை மறுபுறம்.

இத்தனைக்கு மத்தியில் மக்கள் பயபீதியுடன் காலத்தைக் கடத்துகின்றனர். மாவட்டத்திலுள்ள பெரிய சிறிய குளங்கள் கால்வாய்கள் வற்றிவருகின்றன.அம்பாறை மாவட்ட விவசாயத்திற்கு நீரை வழங்கும் பிரதான நீர்வழங்கு மையமாகத் திகழும் சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

மொத்தமாக 770,000 ஏக்கர் அடி நீர் கொள்ளளவு கொண்டது இந்து சமுத்திரம். ஆனால் அம்மட்டம் இன்று குறைந்து வீழ்ச்சியடைந்துள்ளது. இந்தநீர் குறைந்த வேளாண்மைச் செய்கைக்காகவும், குடிநீருக்காகவும், மீன்வளர்ப்பிற்காகவும் மாத்திரமே போதுமானதாகும்.

தற்போது சிறுபோக நெற்செய்கை ஒரு ஒன்றரை மாதகால பயிராகவுள்ளது. எனினுமும் பல பிரதேசங்களில் நீரின்றி அவை மஞ்சள் நிறமாக மாறி வருகின்றன.

வறட்சி தொடர்ந்தால் நீர் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுக்கும் சாத்தியமுள்ளது. இன்றைய வறட்சிநிலை நீடித்தால் சிறுபோக நெற்செய்கைக்கு அனுமதி வழங்கமுடியாத துர்ப்பாக்கிய நிலை தோன்றும் என நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதன்படி பார்த்தால் சிறுபோக நெற்செய்கை அறவே செய்யமுடியாத நிலைதோன்றும். இது நாட்டின் மொத்த தேசிய நெல்உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியைக் காட்டுவதோடு மட்டுமல்லாமல் மாவட்ட விவசாயிகளின் ஜீவனோபாயத்திற்கு பாரிய சவாலாகவும் மாறும். வழமையாக மாவட்டத்தின் சிறுபோக நெற்செய்கைக்காக 120,000 ஏக்கர் காணி பயன்படுத்துப்படுவது தெரிந்ததே.

ஆனால் நீர்மட்டம் குறைந்திருந்த காரணத்தினால் இம்முறை சிறுபோகத்திற்கு ஆக குறைந்த காணிக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சேனநாயக்க சமுத்தரத்தின் நீர்மட்டம் உயராதவரையில் அதாவது மழை பொழியாத வரை சிறுபோக நெற்செய்கையை பூரணமாக மேற்கொள்ள முடியாத மிகவும் அபாயகரமான சூழல் தோன்றும்.

இது பல்வேறு கோணங்களில் தாக்கத்தைச் செலுத்தும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் மழை பொழியும் என மனிதர்கள் நம்புகின்றனர். இறைவன் கைவிடமாட்டான் என்றும் நம்புகின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம். வழமையாக மாவட்டத்தில் பெரும்போகத்தின் போது 150,000 ஏக்கர் காணியில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுவது தெரிந்ததே.

மோசமாக பாதிக்கப்பட்ட திருக்கோவில்!

வறட்சியாலும் குழாய்நீர் துண்டிப்பாலும் எமது திருக்கோவில் பிரதேசத்தில் சுமார் 20,000 பேர் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பூரணமாக குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகன வசதிகள் இல்லை இவ்வாறு திருக்கோவில் பிரதேசசபைத் தவிசாளர் இராசையா வில்சன் கமலராஜன் தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேசத்தில் பின்தங்கிய பகுதிகளிலுள்ள பொதுமக்கள் குடிநீரின்றி அலைவதாக தகவல்கள் கிடைக்கின்றனவே. அதுபற்றி என்ன தெரிவிக்கிறீர்கள் என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:

எமது பிரதேசத்திற்கு பிரதானமாக குடிநீரை விநியோகிக்கின்ற சாகாமம் நீர் சுத்திகரிப்பு மையம் கடந்த இரு வாரகாலமாக குழாய்நீர் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

சாகாமக்குளத்தில் தண்ணீர் வற்றிப் போனமையே அதற்குக் காணரம். இதனால் எமது பிரதேசத்தில் சுமார் 2350 குடும்பங்களைச் சேர்ந்த 20,000 பேர் மிகவும் மோசமாக குடிநீரின்றிப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குழாய் நீர் விநியோகம் அரையும் குறையுமாகவுள்ள அதாவது 40 வீதத்தைப் பெறும் கஞ்சிகுடிச்சாறு காஞ்சிரன்குடா தங்கவேலாயுதபுரம் ஸ்ரீவள்ளிபுரம் மண்டானை குடிநிலம் சாகாமம் தாண்டியடி நேருபுரம் போன்ற கிராமங்கள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு ஒருதுளி தண்ணீர் கூட இல்லை. இவர்களுக்கு பிரதேச சபையும் பிரதேச செயலகமும் இணைந்து 2 நீர் பவுசர்களில் மக்களுக்கு குடிநீரை மட்டும் வழங்கி வருகின்றது.

நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையும் ஒரு பவுசரில் குடிநீர் வழங்கி வருகின்றது. நாம் அக்கரைப்பற்று 2ஆம் கட்டையடிக்குச் சென்று பவுசரில் இந்த தண்ணீர் கொண்டு வரப்படுகின்றது. இதனால் நாளொன்றுக்கு 2 தடவைகள் தான் கொண்டு வர முடியும். போதுமான குடிநீரை விநியோகம் செய்ய எமது சபையிடம் போதுமான பவுசர் வாகனவசதிகள் இல்லை.

ஆக ஒரேயொரு ட்ராக்டர் பவுசர் மட்டுமே வேலை செய்கிறது. மீதி இரு பவுசர்களும் பழுதுபார்க்கப்பட்டு வருகின்றன. அவசர திருத்த வேலைகளுக்கு அவை உள்ளாக்கப்பட்டுள்ளன. எம்மிடம் தீயணைப்புப்படையோ அதற்கான வாகனங்களோ ஆளணியோ இல்லை.

ஆனால் அண்மையில் திருக்கோவிலில் இருகடைகள் தீப்பற்றி எரிந்த போது எமது சபையின் தீயணைப்பு வாகனங்கள் ஸ்தலத்திற்குச் செல்ல தாமதமடைந்ததால் அக்கரைப்பற்று மாநகர சபையிலிருந்து அந்த வாகனம்வந்து தீயணைத்ததாக பொய்யான செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன.

உண்மையில் எமது சபையிடமோ மாவட்டத்தில் எந்தவொரு பிரதேச சபையிடமுமோ தீயணைப்பு வாகன வசதியில்லையென்பதை அனைவரும் அறிவார்கள். மேலும் வழங்கப்படும் குடிநீர் அவர்களுக்கு குடிப்பதற்குக் கூட போதுமானதல்ல.

ஏனைய குளிப்பு மலசலப் பாவனை உடுப்புத்துவைத்தல் போன்ற இன்னொரன்ன தேவைகளுக்கு அந்த மக்கள் நீண்டதூரம் சிறுகுளங்களை நாடவேண்டியுள்ளது. அவையும் தற்போது படிப்படியாக வற்றி வருகின்றன.

இதேவேளை குழாய்நீர் விநியோகத்தில் 60வீதமான வழங்கலைப் பெறும் தம்பட்டை தம்பிலுவில் திருக்கோவில் வினாயகபுரம் போன்ற கிராமங்களில் ஆங்காங்கே சொந்தக் கிணறுகளிருப்பதனால் ஒருவாறு சமாளித்து வருகின்றார்கள்.

வறட்சி நீடித்தால் அவர்களும் மேற்சொன்ன பிரச்சினைகளை எதிர்நோக்குவார்கள். உண்மையில் வருடாவருடம் எழுகின்ற இப்பாரிய பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமாயின் அம்பாறை பன்னலகம குளத்திலிருந்து நீரை நேரடியாக இங்குகொண்டு வரும் பட்சத்தில் இதனை நிரந்தரமாக தீர்க்கமுடியும்.

எனினும் இதனை தற்காலிகமாகத் தீர்த்து வைக்க கடந்ததடவை போன்று நாமும் பிரதேச செயலகமும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையினரும் இணைந்து ஒரு கூட்டத்தைக்கூட்டி நடவடிக்கை எடுப்போம் என்றார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் கூறுகையில்:

உண்மையில் இப்பரச்சினையைத் தீர்ப்பதாயின் மழையைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. அது இறைவனின் சித்தம். இருந்தும் திருக்கோவில் பிரதேச குழாய்நீர் விநியோகத்தை சீராகவும் தாராளமாகவும் வழங்குவதென்றால் ஒரு புதிய திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும்.

அதாவது கொண்டவட்டவான் நீர்த்தேக்கத்திலிருந்து அக்கரைப்பற்றுக்கு நீர்த்தொட்டிக்கு வரும் நீரை அங்கிருந்து நேரடியாக சாகாமத்திற்கு விநியோகம் செய்யும் வண்ணம் ஒரு திட்டத்தை முன்னெடுத்தால் இது சாத்தியமாகும்.

இதற்கு 200 மில்லியன் ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் இதில் கவனமெடுத்தால் திருக்கோவிலுக்கான குழாய்நீர் விநியோகத்தை சீர்ப்படுத்தி அந்த மக்களின் தேவையை பூர்த்திசெய்ய முடியும் என்றார் ஸ்ரீல.சு.கட்சி அமைப்பாளர் ரகுபதி வேண்டுகோள்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தாண்டியடி சங்குமண்கண்டிக் கிராமங்களில் மக்கள் பாரிய குடிநீர்ப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளனர். குழாய்நீர் விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது.

தண்ணீருக்காக மக்கள் அலைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஆலையடிவேம்பு அமைப்பாளரும் முன்னாள் உபதவிசாளருமான கே.ரகுபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்:

மேற்குறித்த பிரதேசங்கள் திருக்கோவில் மற்றும் பொத்துவில் பிரதேச எல்லையுள் வருகின்றன. திருக்கோவில் பிரதேசசபை ஓரளவு நடவடிக்கை எடுத்தாலும் கூட பொத்துவில் பிரதேசசபை அவர்களது பிரதேச மக்களுக்கு குடிநீரை வழங்க இதுவரை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது கவலைக்குரியது.

குடிநீருக்காக அவர்கள் அலைந்து திரிவதை நேரில் கண்டபோது வேதனையாகவிருந்தது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை இப்பிரச்சினைக்கு நிரந்தரதீர்வு காண வேண்டும்.

சாகாமக்களத்தில் நீர்வற்றினால் என்ன? அருகிலுள்ள வம்மியடிக்குளத்தில் தேவையான நீர் இருக்கிறது. அங்கிருந்து நீரைப்பெற்று அந்த மக்களுக்க வழங்க முடியாதா? எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுவிடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்க தண்ணீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன்.

இது தொடர்பாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அக்கரைப்பற்றுப் பிராந்திய பொறியியலாளர் தா.வினாயகமூர்த்தியிடம் கேட்டபோது சாகாமக்குளத்தில் நீர்வற்றியிருப்பதே இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணமாகும்.

தண்ணீரின்மையால் தான் குழாய்நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கிறது என்றார். மொத்தத்தில் வறட்சி அம்பாறை மாவட்டத்தை கடுமையாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கின்றது.

அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் இத்தகைய காலகட்டத்தில் விரைந்து செயற்படவேண்டும். வெறுமனே தரவு அறிக்கையைவிடுப்பதோடு நின்றுவிடாது குறித்த மக்களுக்கு நீரை வழங்க ஏனைய தரப்பினரோடு இணைந்து தேவையானால் அம்.மேற்குப் பிரதேசங்களைப் போன்று வவுசர்களையும் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர் நடவடிக்கை எடுப்பார்களா?

-எழுத்தாளர்  V.T.Sahadevarajah-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net