பேரறிவாளன் வழக்கில், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

பேரறிவாளன் வழக்கில், மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு ஒன்றுதான், எனினும் சொல்லிய செய்திகள் பல…

01. அரிதினும் அரிதாக பயன்படுத்தப்படும் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஆளுநர் முடிவெடுக்க தொடர்ந்து தாமதித்ததால் நீதிமன்றமே விடுவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. மனித உரிமை போராட்டத்தின் வெற்றியாக பார்க்கப்பட வேண்டிய வரலாற்று சிறப்புமிக்கத் தீர்ப்பு இது.

02. மாநில அரசுகளுக்கும் முன்விடுதலை வழங்குவதற்கான அதிகாரம் உள்ளது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம். கொலை வழக்கில் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் என்ற வாதத்தை முழுமையாக நிராகரித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.

03. அமைச்சரவைக்கு தான் அதிகாரம்; அதை செயல்படுத்தும் கருவியே ஆளுநர் என்பது தீர்ப்பு உணர்த்தும் மற்றொரு செய்தி. மாநில உரிமை/கூட்டாட்சித் தத்துவத்தை காக்கும் அம்சங்களை கொண்டது இந்த தீர்ப்பு

04. ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பில்லை என்பதை ஏற்க இயலாது; ஆளுநர் தாமதித்தால் நீதிமன்றமே விடுவிக்கும் என்பது தீர்ப்பு உணர்த்து செய்தி. ஆளுநர் காரணமில்லாமல் மாதக்கணக்கில் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்தால் அதை நீதிமன்றம் பரிசீலிக்கும்; கேள்வி கேட்கும் என்பது மற்றொரு அம்சம்.

05. ஆளுநர்/ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்திருப்பது மற்றொரு முக்கிய அம்சம். முடிவெடுக்காமல் ஆளுநர் செய்த காலதாமதத்தை இடித்துரைத்த நீதிமன்றம், நேரடியாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது. அதேபோல், ஒன்றிய அரசின் விநோத வாதங்களை முற்றுமுழுதாக நிராகரித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
ச.ஜெ. ரவி

Copyright © 2001 Mukadu · All rights reserved · designed by Speed IT net