இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்!

வவுனியாவில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து ஊழியர்கள் தாக்குதல்!

வவுனியா எட்டாம் கட்டை பகுதியில் இ.போ.ச நடத்துனர் மீது தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த இலங்கை போக்குவரத்து சபை ஊழியர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (வௌ்ளிக்கிழமை) பிற்பகல் 1.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிக்குளம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தினை எட்டாம் கட்டை பகுதியில் வைத்து வவுனியாவிலிருந்து வாரிக்குட்டியூர் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஊழியர்கள் வழிமறித்துள்ளனர்.

தனியார் பேருந்துக்கான நேரத்தில் அரச பேருந்து பயணித்தமையை காரணம் காட்டி ஏற்பட்ட கருத்து முரண்பாட்டின் போது இ.போ.ச நடத்துனர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் தா.விக்கினேஸ் (31) என்பவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பூவரசங்குளம் பொலிஸார் தனியார் பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதியை கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக தெரிவித்தனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net