யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒதுக்கப்பட்டன!

யுத்தத்திற்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒதுக்கப்பட்டன!

யுத்தம் என்ற காரணத்திற்காக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட வரலாறு தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

இந்த வரலாற்றை மாற்றி நாங்கள் நான்கு ஆண்டுகளில் நல்லாட்சி அரசினூடாக பல வேலைகளை செய்திருக்கின்றோம் என கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாழங்குடாவில் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் விஜயம் ஒன்றை இன்று மேற்கொண்டார்.

அவருக்கு தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதி எஸ்.புண்ணியமூர்த்தி உபட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், உப பீடாதிபதிகளினால் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து கல்லூரியின் ஒன்றுகூடல் மண்டபத்தில் மாணவர்கள், விரிவுரையாளர்கள்,பழைய மாணவர்கள்,உபபீடாதிபதிகளுடனான கலந்துரையாடல் நடைபெற்றது.

இதன்போது கல்லூரியின் தற்போதைய நிலை,தேவையாகவுள்ள வளங்கள் மற்றும் கல்லூரி எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து பீடாதிபதியினால் இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்திற்கு முகங்கொடுத்த மாகாணங்கள் என்ற அடிப்படையில் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படுகின்ற நிதிகள் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும்.

யுத்தத்திற்கு முன்னரும் அரசாங்கத்தினால் அந்தப் பகுதிகளுக்கு நேரடியான சேவைகளை செய்ய முடியாதிருந்த காரணத்தினால் வளங்கள் கிடைக்கவில்லை. அதற்குப் பின்னரும் கிடைக்கவில்லை.

யுத்தத்திற்குப் பின்னர் பாகுபாடு பார்த்து வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒதுக்கப்பட்டன. நல்லாட்சி அரசாங்கம் வந்த பின்னரே ஐம்பது வீதமான அபிவிருத்தித் திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கல்விக்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் இவ்வருடத்திற்கான பல வேலைத்திட்டங்களை செய்வதற்காக 2000மில்லியன் ரூபா நிதியை நான் கேட்டிருக்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தின் பல தேசிய, மாகாண பாடசாலைகளில் மாணவர்கள் இருந்தும் வளங்கள்பற்றாக்குறையாக இருக்கின்றன. ஆசிரியர் பற்றாக்குறையாக இருக்கின்றனர். தொழினுட்ப ஆய்வுகூடங்கள் இல்லாத நிலையில் பல பாடசாலைகள் இருக்கின்றன.

கல்வியியல் கல்லூரி பீடாதிபதி அவர்கள் இங்குள்ள பல குறைபாடுகளை கூட்டிக்காட்டியிருந்தார். நான் இவ்விடயம் தொடர்பில் கல்வி அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடி நடவடிக்கைகளை எடுப்பேன்.

வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கல்வியியல் கல்லூரிகள்,தேசிய பாடசாலைகளை பார்க்கின்றபோது அதில் பத்துவீதம் கூட எமது பாடசாலைகள் இல்லை.

அந்தளவிற்கு நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றோம். யுத்தம் என்ற காரணத்திற்காக வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்,முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட வரலாறு தொடர்ச்சியாக நடைபெற்றுவருகின்றன.

இந்த வரலாற்றை மாற்றி நாங்கள் நான்கு ஆண்டுகளில் நல்லாட்சி அரசினூடாக பல வேலைகளை செய்திருக்கின்றோம். மீள்குடியேற்றம் செய்திருக்கின்றோம்.

எங்களுக்கு சொந்தமான காணிகளை அரசாங்கத்திடமிருந்து விடுவித்திருக்கின்றோம். சிறைக்கைதிகளை விடுவித்திருக்கின்றோம். இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியிருக்கின்றோம்.

கடந்த காலங்களில் வடக்கு கிழக்கிலிருந்த வெற்றிடங்கள் வெளி மாகாண மாவட்டங்களிலிருந்து நிரப்பப்பட்டு ஆறுமாதங்களுக்குப் பின்னர் சொந்த இடங்களுக்கு அந்த இளைஞர் யுவதிகள் வேலைகளுக்கு செல்கின்றார்கள்.

எங்களுடைய இளைஞர் யுவதிகள் படித்து பட்டம் பெற்றுவிட்டு வேலைகளுக்காக வீதிகளில் நிற்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கே நாங்கள் தள்ளப்பட்டிருந்தோம். அந்த நிலைமையை நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் நாங்கள் தடுத்து நிறுத்தியிருக்கின்றோம்.

இருந்தபோதும் சில அமைச்சர்கள் தங்களுடைய மாவட்டங்களிலிருந்து ஏனைய மாவட்டங்களுக்கு நியமனங்களை வழங்கியிருக்கின்றார்கள்.

கடந்த காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினூடாக சிலசில முரணான கருத்துகளை நான் பேசியதற்காக எனக்கு எதிராக தெற்கிலே இனவாதங்கள் தூண்டப்பட்டன.

நாங்கள் பாராளுமன்றம் சென்றது மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காகும். மக்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அதற்காக குரல் கொடுக்கவேண்டிய பாரிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது.

அதன்படி ஆறுவயது சிறுமியின் துன்பத்திற்காக நான் குரல் கொடுத்ததற்காக ஒருசில இனவாதிகள் என்னை பழிவாங்க முற்பட்டனர். ஆனால் அது நிறைவேறவில்லை. நான் சரியான பாதையில்தான் சென்று கொண்டிருக்கின்றேன்.

நான் பிழையான பாதையில் செல்வேன் என்றால் நானே இதில் இருந்து விலகிக்கொள்வேன்.எனது கட்சியின் தலைவரோ கட்சியோ கட்சியிலிருந்த எவரோ என்னை ராஜினாமா செய்யுமாறு கோரவில்லை.

அரசாங்கத்திற்கு இடையூறாக இருக்கக்கூடாது, விசாரணைகள் மூலம் சரியான முடிவு வரவேண்டுமென நானே என்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தேன்.

வடக்கு கிழக்கு,மலையகம் போன்ற தமிழ் பேசுகின்ற மக்கள் வாழும் பகுதிகளுக்கு நேரடியாக சென்று அவர்களுடைய பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பதற்காக கௌரவ பிரதமர் அவர்களும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் அவர்களும் எனக்கு கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியை தந்திருக்கின்றார்கள்.

எனக்கு வாக்களித்த கிளிநொச்சி மாவட்டம், யாழ் மாவட்ட மக்களை கௌரவப்படுத்தும் வகையில் எனக்கு இந்த அமைச்சு கிடைத்திருக்கின்றது.

கடந்த 52 நாட்டிகள் நடைபெற்ற அரசியல் கிளர்ச்சியின்போது புதிய பிரதமர் இருந்த காலப்பகுதியில் இருந்த அரசாங்கம் கடந்த நல்லாட்சியின்போது வடகிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகளை தமது பகுதிக்கு கொண்டுசென்றனர். அவர்களை இதன்மூலம் நாங்கள் புரிந்துகொள்ளமுடியும்.

வேறு எந்த பகுதியிலும் இருந்த நிதிகளை அவர்கள் எடுக்கவில்லை.வடகிழக்கு பிரதேசத்திற்கு ஒதுக்கிய நிதிகளிலேயே அவர்கள் இவ்வாறு செயற்பட்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net