இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக பிரித்தானியாவின் தி கார்டின் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை யுத்தத்தின்போது கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்பட்டமைக்கான புகைப்பட ஆதாரங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் இராணுவப் படையினர் சிவிலியன்கள் மீது கொத்தணி குண்டுத் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலிருந்து நிலக்கண்ணி வெடிகளை மீட்கும் பணியாளர்கள் கொத்தணி குண்டுகளை மீட்டுள்ளனர்.
அரசாங்கத்தின் யுத்த சூன்ய வலயத்தில் இவ்வாறு கொத்தணி குண்டுகளின் பகுதிகளை காணக் கிடைத்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. (ஜிரிஎன்) ஹலோ ட்ரஸ்ட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் கடமையாற்றிய மீட்புப் பணியாளர் ஒருவர் கொத்தணி குண்டு குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தில் காணப்படும் கொத்தணி குண்டு ரஸ்யாவில் தயாரிக்கப்பட்டது என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆயுதம் குறித்த கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் அமர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொத்தணி குண்டுகள் பயன்படுத்தப்படவில்லை என மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கமும் அதற்கு முன்னர் ஆட்சி செய்த அரசாங்கங்களும் நிராகரித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
2011 மற்றும் 2012ம் ஆண்டுப் பகுதியில் நிலக்கண்ணி வெடி மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது ஆனையிறவு பாச்சிளாப்பள்ளி என்னும் இடத்தில் கொத்தணி குண்டுகளின் 42 பகுதிகளை மீட்டுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் நிறுவன பணியாளர் தெரிவித்துள்ளார்.
குளோபல் தமிழ்