புங்குதீவு மாணவி வித்தியாவின் தாயாருக்கு அச்சுறுத்தல் விடுத்த சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜுலை மாதம் 5 ஆம் திகதி வரை ஊகாவற்றுறை நீதிமன்றம் நீடித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் தொடர்ச்சியாக அவரது தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டின்பேரில் வித்தியா கொலை வழக்குச் சந்தேக நபர்களான சுவிஸ்குமாரின் தாயார் மகாலிங்கம் தவராணி, உசாந்தனின் தாயார் சிவதேவன் செல்வராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்களை மன்றில் முன்னிலைப்படுத்தியபோது இன்று வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் சந்தேகநபர்கள் இன்று மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி ஆர்.சபேசன், சந்தேக நபர்களை பிணையில் விடுவிக்குமாறு விண்ணப்பம் செய்தார்.
பிணை மனுவை நீதிவான் எம்.எல்.றியால் நிராகரித்ததோடு, வித்தியா கொலை வழக்கு நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திய வழக்கு என்பதால் சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க முடியாது எனவும், மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்யுமாறும் தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டுள்ளார்.
அத தெரண