விபத்திலிருந்து பலரின் உயிரை காப்பாற்றிய பெண் இறுதியில் உயிரிழந்த சோகம்!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தின்போது பலரின் உயிரையும் காப்பாற்றிய பெண் இறுதியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
டெல்லி அருகே குர்கான் நகரில் 200 குடும்பங்கள் வசிப்பதற்கு ஏற்றவாறு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இங்கு கடந்த 7ஆம் திகதி நள்ளிரவு 2 மணியளவில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது.
இதனை பார்த்த ஸ்வாதி என்ற பெண் உடனடியாக அனைவரின் வீட்டு கதவுகளையும் தட்டி எச்சரித்து மாடிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளிக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தனர்.
ஆனால் ஒரு மணி நேரமாகியும் ஸ்வாதி மட்டும் வெளியில் வராததால் சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் தீயணைப்பு வீரர்களிடம் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் உள்ளே சென்று தேடுதல் வேட்டை நடத்தும்போது, பூட்டப்பட்ட ஒரு கதவின் ஓரமாக மயங்கிய நிலையில் ஸ்வாதியை மீட்டுள்ளனர்.
பின்னர் வேகமாக அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது, ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலரின் உயிரையும் காப்பாற்றிய ஸ்வாதி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புனே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஸ்வாதி, மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த க்ரிஷ் என்பவரை திருமணம் செய்துகொண்டு குர்கான் நகரில் வசித்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் மகள் ஒருவரும் உள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.