போர் இடம்பெற்றால் யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பு!

போர் இடம்பெறுமாக இருந்தால், அங்கு யுத்தக்குற்றச்சாட்டுக்கள் இடம்பெறுகின்றமை இயல்பான ஒன்றாகும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
நல்லூரில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய போதே, அவர் இதனை கூறினார்.
மேலும், இரண்டு தரப்பினரும் போர்க்குற்றம் இழைத்துள்ளதாக சர்வதேச அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளமையால், உண்மைகளைத் தெரிந்துக்கொள்ளவே விசாரணைக்கு தமது தரப்பு வலியுறுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தோடு சர்வதேச விசாரணை அவசியம் என கூறும் தரப்பினருக்கு அந்த அறிக்கையில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பாக முழுமையான தெளிவு இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.
குறித்த அறிக்கைகளில் இராணுவம் போர்க்குற்றம் இழைத்தமைக்கான பல சான்றுகள் இருக்கின்றன என கூறப்பட்டுள்ள அதேவேளை தமிழீழ விடுதலை புலிகளும் யுத்த குற்றத்தை இழைத்துள்ளார்கள் என்றும் அதில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது என சுமந்திரன் கூறினார்.
எனவே யுத்தக்குற்ற விசாரணை அவசியம் என கூறிவரும் தரப்பினர் சர்வதேசத்தின் அறிக்கையில் என்ன இடம்பெற்றுள்ளது என்பதை முழுமையாக அறிந்துகொள்ளவேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் கூறியுள்ளார்.