அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?

அபிநந்தனை விடுவிக்க பாகிஸ்தான் முடிவெடுத்தது ஏன்?

தற்போதைய இந்தியா – பாகிஸ்தான் மோதல் பிரச்சனையின் முதல் நாளில் இருந்தே பதற்றம் அதிகரிப்பதை பாகிஸ்தான் விரும்பவில்லை.

இந்தியாவுடனான பதற்றத்தை தணிக்கவும், உறவை சகஜ நிலைக்கு கொண்டுவரவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கையாளும் உத்திகளின் ஒரு பகுதியாகவே இந்திய விமானப்படை விமானி அபிநந்தனை விடுவிக்கும் அவரது நடவடிக்கை அமைந்துள்ளது.

அபிநந்தனை விடுவிக்கும் முடிவை அறிவித்தபோது இம்ரான்கான் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை, தாம் அழுத்தத்துக்கு ஆளானதாகவும் தெரிவிக்கவில்லை.

ஆனால், இந்திய பாகிஸ்தான் உறவில் பதற்றம் தனிவதற்கான நேர்மறையான அறிகுறிகள் தெரிவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். சௌதி வெளியுறவு அமைச்சர் திட்டமிடப்படாத முறையில் பாகிஸ்தானுக்கு திடீரென பறந்து சென்றார். இந்த இரண்டு நிகழ்வுகளும் இந்த விவகாரத்தில் ஏதோ ஒருவகையில் சர்வதேச சக்திகள் ஈடுபட்டிருப்பதைக் காட்டின.

இந்தியா தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கையாளும் அணுகுமுறையை சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அவருக்கு உண்மையான அதிகாரம் இல்லை. ராணுவத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டவரே அவர் என்பது போன்ற பிம்பத்தை இந்திய ஊடகங்கள் உருவாக்கி இருந்தன. இந்நிலையில் தம்மை ஓர் அரசியல் தலைவராகவும், உண்மையில் பாகிஸ்தானின் விவகாரங்களை கட்டுப்படுத்துகிறவராகவும் நிரூபிக்க அவர் முயற்சி செய்தார்.

பாகிஸ்தானின் முக்கிய முடிவுகள் பாகிஸ்தானின் அரசியல் தலைமையினால்தான் எடுக்கப்படுகின்றன. அதன் ராணுவத் தலைமையினால் அந்த முடிவுகள் எடுக்கப்படவில்லை என்பதை உலகத்துக்கு காட்ட விரும்பினார் அவர்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தலைவர்கள் தொலைபேசி மூலம் பேசுவார்கள் என்றும் அதன் மூலம் பதற்றம் தணியும் என்றும் பேச்சு நிலவுகிறது.

எனவே, நாள்கள் செல்லச் செல்ல உறவு இரு நாட்டு உறவில் சூடு தணியும். இந்திய விமானப்படை விமானி இந்தியா திரும்புவது அதற்கு உதவும் என்ற நிலை இருக்கிறது.

தொடக்கத்தில் இரண்டு இந்திய விமானப்படை விமானிகள் பாகிஸ்தானில் இருப்பதாக ஒரு குழப்பம் நிலவியது. ஆனால், பாகிஸ்தான் பாதுகாப்பு படை செய்தித் தொடர்பாளர் இந்த குழப்பத்தை தீர்த்து ஒருவர் மட்டுமே பாகிஸ்தான் பிடியில் இருப்பதாக தெளிவுபடுத்தினார்.

ஆனால், சுட்டு வீழ்த்தப்பட்ட இந்திய விமானங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை இன்னமும் பாகிஸ்தான் இரண்டு என்றுதான் கூறிவருகிறது. ஒரு விமானம் பாகிஸ்தான் பகுதியில் விழுந்ததாகவும் மற்றொன்று இந்தியப் பகுதியில் விழுந்தது என்பது அவர்களது கூற்று. பாகிஸ்தானின் F16 விமானத்தை வீழ்த்தியதாக இந்தியா கூறுகிறது. ஆனால், பாகிஸ்தானில் அதை நிரூபிக்க சுயாதீனமான ஆதாரம் ஏதுமில்லை.

எனவே நம்மால் உறுதியாக சொல்ல முடிவது இதுதான். ஓர் இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஓர் இந்திய பைலட்டை பாகிஸ்தான் பிடித்துவைத்துள்ளது. மற்றதெல்லாம் கூற்றும் எதிர் கூற்றும்தான்.

– BBC – Tamil

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net